முகப்பு
தருமபுரி

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு எதிரொலி: விறகுகளின் பயன்பாடு அதிகரிப்பு

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரிப்பதால் விறகுகளைப் பயன்படுத்துவோர்

Updated On : 16 அக்டோபர், 2013 at 2:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:46 PM

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரிப்பதால் விறகுகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பெட்ரோலியப் பொருள்களின் விலை அடிக்கடி அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் நோக்கில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரையில் சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெறாதவர்களுக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

Advertisement

கடந்த 2011ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதிலும் உள்ள 33.222 நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்காக 52,806 கிலோ லிட்டர் மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது.

இந்த அளவு கடந்த 2012-ஆம் ஆண்டில் 39,429 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. இதன்காரணமாக, நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவு சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 5 லிட்டரும், ஒரு எரிவாயு உருளை வைத்திருப்போருக்கு 2 லிட்டராகக் குறைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இரண்டு எரிவாயு உருளை வைத்திருப்போருக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.

ஏழை, நடுத்தர மக்களுக்காக விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதால் ஹோட்டல், தேநீர் கடைகளுக்கு மண்ணெண்ணெய் கிடைப்பது அரிதாகியது.

இதையடுத்து, ஹோட்டல் நடத்துவோர் லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.45 முதல் ரூ.50 கொடுத்து வெளிமார்க்கெட்டில் வாங்குகின்றனர். கூடுதல் விலை கொடுத்தும் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பதில்லை.

இதற்கு மாற்றானதாக கருதப்படும் வர்த்தக சமையல் எரிவாயு உருளை விலையும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை ரூ.450-க்கு விற்கப்படுகிறது. இதைப் பதிவு செய்து பெற சுமார் 20 நாள்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை பல இடங்களில் உள்ளது.

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு, அடிக்கடி உயரும் சமையல் எரிவாயு உருளை போன்ற காரணங்களால் விறகுகள், மரத்தூளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் வனப் பகுதி அதிகம் என்பதால் குறைந்த விலைக்கு விறகு, மரத்தூள் அதிகளவில் கிடைப்பதால் குடியிருப்பு மற்றும் ஹோட்டல்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.