தருமபுரி

தருமபுரி ரயில் நிலைய தகவல் திரையில் தமிழ் வருமா? தருமபுரி ரயில் நிலைய திரையில் கன்னட மொழியில் ஒளிபரப்பப்படும் வாசகங்கள்

தினமணி

தருமபுரி ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கும் திரையில் தமிழில் தகவல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
 தென்மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூரு கோட்டத்துக்குள்பட்டது தருமபுரி ரயில் நிலையம். இந்த வழித்தடம் வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள், பெங்களூரு - சேலம் பயணிகள் ரயில்கள் சென்று வருகின்றன. இந்த ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒசூர், பெங்களூரு, சேலம், ஈரோடு, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு கோட்டம் மற்றும் கேரள மாநிலம், பாலக்கோடு கோட்டத்தில் சில பகுதிகளைப் பிரித்து புதிதாக சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
 அப்போது, சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியிலிருந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ராயக்கோட்டையிலிருந்து ஒசூர் வரையிலான சுமார் 175 கி.மீ. தொலைவு இருப்புப் பாதை மற்றும் அப்பாதையிலுள்ள ஒசூர், கெலமங்கலம், ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தருமபுரி, சிவாடி, சேலம் மாவட்டம் காரவள்ளி ஆகிய ரயில் நிலையங்கள் புதிதாக பிரிக்கப்பட்ட சேலம் கோட்டத்தில் இணைக்கப்படாமல், பெங்களூரு கோட்டத்திலேயே தொடர்ந்து இணைந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டு அக்கோட்டத்திலேயே தொடர்கிறது.
 இதனால், தமிழகத்தில் உள்ள இந்த 175 கி.மீ. தொலைவில் உள்ள இருப்புப் பாதைக்குள்பட்ட ரயில் நிலையங்களில் ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலேயே தொடர்ந்து பயணச்சீட்டு பதிவு படிவங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு பயணிகள் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது எதிர்ப்புத் தெரிவித்தும், தென்மேற்கு ரயில் கோட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் வந்தனர்.
 இருப்பினும், அவர்கள் தமிழில் படிவங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பெயரளவிலான பதிலை மட்டும் அளித்து வருகின்றனர்.
 இந்த நிலையில், தற்போது, தருமபுரி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கும் மையத்தில் மூன்று கணினித் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இத்திரையில், கீழ்பகுதியில் பயணச்சீட்டு, வண்டி எண் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
 இதுதவிர, இத்திரையின் மேல்பகுதி முழுவதும், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. குறிப்பாக, 24 மணி நேரமும் பயணிகள் ரயில்வே நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளலாம். பயணச் சீட்டு பதிவு செய்வது, ரத்து செய்வது, பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயணத்தின் போது, தங்களது உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். திருடர்கள் உள்ளனர் ஜாக்கிரதை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
 இத் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், அதைத் தொடர்ந்து, கன்னடத்திலும் மட்டுமே ஒளிபரப்பப்
 படுகின்றன.
 இதனால் ரயில் நிலையத்துக்கு வரும் சாதாரண மக்கள், திரையில் ஒளிபரப்பப்படும் தகவல்கள் குறித்து விவரங்கள் தெரியாமல் விழிபிதுங்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி நல்ல நோக்கத்தில் ஒளிபரப்பும் தகவல்கள், மாநில மொழிகளில் இல்லாமல் கன்னடத்தில் வருவதால் தங்களுக்கு புரியவில்லை எனவும், ஒளிபரப்பும் நோக்கம் பயனற்றதாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
 எனவே, பெங்களூரு கோட்டத்தில் இணைந்துள்ள, தமிழக பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழில் தகவல்களை ஒளிபரப்ப, தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT