தருமபுரி

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை

தினமணி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் பெண்கள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து, செல்லிடப்பேசியில் அதனை விடியோவாகப் பதிவு செய்த வழக்கில் வட்டிக்கடைக்காரருக்கு 4 ஆயுள் சிறைத் தண்டனைகளை வழங்கி தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மந்தைவெளி, மேல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மு. சிவராஜ் (44). அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவந்த இவர், வட்டிக்குப் பணம் பெறவந்த பல பெண்களை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 மேலும், அவற்றை செல்லிடப்பேசியில் விடியோவாகப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு அப் பெண்களை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பாலக்கோடு பகுதியில் இந்த ஆபாச விடியோ காட்சிகள் பலரிடம் உலவத் தொடங்கியதையடுத்து, பாலக்கோடு கிராம நிர்வாக அலுவலர் விஜயன் கடந்த 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு காவல் துறையில் புகார் அளித்தார்.
 புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவர்களில் 4 பெண்களிடம் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலமும் பெறப்பட்டது.
 இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
 முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் 4 ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
 மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்.
 இச் சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த மா. முன்னா என்பவருக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
 இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT