கார் மரத்தில் மோதி விபத்து: தருமபுரி இளைஞர் சாவு
கோவை மாவட்டம், அன்னூர்-சத்தி சாலையில் பசூர் அருகே நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், அன்னூர்-சத்தி சாலையில் பசூர் அருகே நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் விஜயபாரத் (25). இவர் தனது நண்பர்கள் அகிலன் (23), ஸ்ரீதர் (23) ஆகியோருடன் காரில் அன்னூர்-சத்தி சாலையில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது, பசூர் அருகே திடீரென நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியிலேயே விஜயபாரத் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அகிலன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.