ஜன.27-இல் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வு: தருமபுரியில் 5,047 பேர் எழுதுகின்றனர்
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற ஜனவரி 27- இல் நடத்தப்படும் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற ஜனவரி 27- இல் நடத்தப்படும் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (ஜூனியர் இன்ஸ்பெக்டர்) அலுவலருக்கான போட்டித் தேர்வினை தருமபுரி மாவட்டத்தில் 5,047 பேர் எழுதுகின்றனர்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (ஜூனியர் இன்ஸ்பெக்டர்) அலுவலருக்கான போட்டித் தேர்வு தருமபுரி மாவட்டத்தில், வருகிற ஜன. 27 அன்று முற்பகலில் நடைபெறவுள்ளது.
தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தருமபுரி மையத்தில் மொத்தம் 5,047 தேர்வர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு எழுத வருவோர் தேர்வு மையத்தில் செல்லிடப்பேசி, எலக்ட்ரானிக் கைகடிகாரம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற உபகரணங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, அவற்றை தேர்வு மையங்களுக்குக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, தேர்வு மையங்கள் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.