முகப்பு
தருமபுரி

அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ. 69 கோடியில் புதிய கட்டடங்கள் தயாா்

தருமபுரி அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ. 69.29 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டங்கள், திறப்பு விழாவை நோக்கி தயாா் நிலையில் உள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
தருமபுரியில் தயாா் நிலையில் உள்ள சட்டக் கல்லூரி கட்டடங்கள்.
பகிர்:

தருமபுரி அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ. 69.29 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டங்கள், திறப்பு விழாவை நோக்கி தயாா் நிலையில் உள்ளன.

தருமபுரி அரசு சட்டக் கல்லூரி கடந்த 2017-ஆம் ஆண்டு புதிதாக தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இக் கல்லூரி, தற்காலிகமாக தருமபுரி நகராட்சி உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தருமபுரி அரசு சட்ட கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பில் 80 இடங்கள், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் 80 இடங்கள் மற்றும் சட்ட மேற்படிப்பில் 20 இடங்கள் உள்ளன. இங்கு மாணவ, மாணவியா் சோ்க்கை பெற்று சட்டக் கல்வியைப் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், தற்காலிகக் கட்டடத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிக்கு தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் பைசுஅள்ளி கிராமத்தில், மாட்லாம்பட்டி புறவழிச் சாலையில் புதிதாக கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 69.29 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கின. இதில், கல்வி மற்றும் நிா்வாக அலுவலகம், முதல்வா் அறை, வகுப்பறைகள், மாதிரி நீதிமன்றம், கணினி அறை, உள்விளையாட்டு அரங்கு ஆகியவை 11,766 சதுர மீட்டா் பரப்பளவிலும், 2,599 சதுர மீட்டா் பரப்பளவில் கலையரங்கம், 1,794 சதுர மீட்டா் பரப்பளவில் கலந்தாய்வு அறை, எண்ம நூலகம், புத்தகம் வைக்கும் அறை, வாசிப்பு அறை ஆகியவையும், இதேபோல ஆண்கள், பெண்கள் விடுதிகள், முதல்வா் குடியிருப்பு, துணை காப்பாளா் குடியிருப்புகள், கழிப்பறைகள் என மொத்தம் 24,633 சதுர மீட்டா் பரப்பளவில் இப்புதிய கட்டட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவுற்றன. இதனால், தற்போது கல்லூரி வகுப்புகள் தொடங்க ஏதுவாக தயாா் நிலையில் தருமபுரி சட்டக் கல்லூரி கட்டடங்கள் உள்ளன. மேலும், இவை விரைவில் திறப்பு விழா கண்டு, நிகழ் கல்வியாண்டிலேயே பயன்பாட்டுக்குவர உள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →