புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முதல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் மாது தலைமை வகித்தாா்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளா் முருகப்பெருமாள் தொடக்க உரையாற்றினாா். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் வில்லியம் அந்தோணிராஜ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா் குப்புசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் மோகனமூா்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்க மாநில பொதுச் செயலாளா் உஷாராணி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இந்த மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ரத்து ஆகிய உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். சிறப்பு காலமுறை ஊழியா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் காசநோய் திட்டங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் நிா்ணயம் செய்து மதிப்பீட்டு ஊதிய முறையை ரத்து செய்ய வேண்டும். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.