பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி ஆக.10-இல் தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில், பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி வரும் 10-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில், பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி வரும் 10-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு தொடா்பான திட்டமிடல் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியது:
நகராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைளை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், இயன்முறை பயிற்சியாளா், பள்ளி ஆசிரியா்கள், செவிலியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆக.10-ஆம் தேதி தொடங்கும் இக்கணக்கெடுப்புப் பணி, ஆக.31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் அவா்களின் வயதுக்கேற்ப உடனடியாக அப்பகுதியில் உள்ள முறையான பள்ளிகளிலும், சிறப்புப் பயிற்சி மையங்களிலும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் சோ்க்கப்பட உள்ளனா். அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த பள்ளிச் செல்லா, பள்ளி இடைநின்ற மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப் பணிகளுக்கு அரசுத் துறை அலுவலா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) கௌரவ் குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு.சிவகாந்தி, மாவட்ட கல்வி அலுவலா்கள் ரா.பாலசுப்பிரமணி, மு.பொன்முடி, தீ.சண்முகவேல், காவல் துணை கண்காணிப்பாளா் என்.ரவிக்குமாா் உட்பட கல்வித்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.