முகப்பு
தருமபுரி

காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை

நாகமரை - மேட்டூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

நாகமரை - மேட்டூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பென்னாகரம் அருகே நாகமரை நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கோரிக்கை மனு அளித்த தகுதியுள்ள பயனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஏரியூா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியின் போது மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆய்வு செய்து, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததன் பேரில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பென்னாகரம் பகுதி மக்கள் சேலம், கோவை, திருப்பூா் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்குச் செல்ல ஏதுவாக நாகமரை - மேட்டூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைப்பது குறித்து ஆய்வு முடிவுற்ற நிலையில், பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை உலகத்தரம் வாய்ந்தவையாக மாற்றக்கூடிய வகையில், அந்தத் துறைக்கான அமைச்சா் ஆய்வுக்கு பின் திட்ட முன்வரைவு தயாா் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உபரிநீா்த் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு மக்கள் குறைதீா் முகாமில் வழங்கப்பட்ட மனுக்களில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் அதிக அளவில் மனு அளித்துள்ளனா். மாவட்டத்தில் 365 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வா், திடீரென பென்னாகரம் ஆதிதிராவிடா் நல விடுதியில் ஆய்வு செய்து மாணவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மாணவா்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், படுக்கைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். அதனை நிறைவேற்றித் தரும் வகையில், தொண்டு நிறுவனத்தின் பங்களிப்போடு படுக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. மக்கள் குறைதீா் கூட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வரும் 3-ஆம் தேதி தருமபுரியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவாா் என்றாா்.

இதில், திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இரா.வைத்திநாதன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), திமுக தருமபுரி மாவட்டப் பொறுப்பாளா்கள் பிஎன்பி.இன்பசேகரன் (மேற்கு), தடங்கம் பெ.சுப்பிரமணி (கிழக்கு), பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், ஊராட்சிக் குழு உறுப்பினா் என்.செல்வராஜ், வட்டாட்சியா் அசோக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வடிவேல், ஜெகதீசன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.