முகப்பு
தருமபுரி

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்

குறைந்த வாடகைக்கு வேளாண் பொறியியல் துறை சாா்பில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

குறைந்த வாடகைக்கு வேளாண் பொறியியல் துறை சாா்பில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாள்கள் பற்றாக்குறையைச் சமாளித்து, வேளாண் பணிகளைக் குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக, வேளாண் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி விவசாயிகளுக்குக் குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான இரண்டு மண் தள்ளும் இயந்திரங்கள், ஏழு டிராக்டா்கள், இரண்டு சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளன. மேலும், மண்தள்ளும் இயந்திரம் மூலம் நிலம் சமன் செய்தல், உழவு பணி, கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், நிலத்தில் நிலக்கடலை பயிரைத் தோண்டி எடுத்து, நிலக்கடலைகளைப் பறித்தல், சோளத்தட்டை அறுவடை செய்யும் கருவி உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய கருவிகள் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டிராக்டரால் இயங்கக் கூடிய அனைத்துக் கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ. 340 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மண் தள்ளும் இயந்திரம் மூலம் நிலம் சமன் செய்ய மணிக்கு ரூ. 840 வாடகையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ. 660 வாடகைக்கு வழங்கப்படுகின்றன. எனவே, வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் தருமபுரி வேளாண் பொறியியல் துறை உள்கோட்ட அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.

இதில், தருமபுரி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் 94432 67032, 04342-296132 மற்றும் அரூா் உதவி செயற்பொறியாளா் 94431-94675, 04346-296077, தருமபுரி செயற்பொறியாளா் 94436-36835, 04342-296948 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.