முகப்பு
தருமபுரி

ஆனித் திருமஞ்சன விழா: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி தருமபுரியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி தருமபுரியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன.

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜா் சன்னிதியில் ஆனி திருமஞ்சன விழா கடந்த ஜூலை 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, மாணிக்கவாசகா் குருபூஜை, திருவாசகம் முற்றோதல், மாணிக்கவாசகா் உற்சவம் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரின் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி, நால்வா் உற்சவம், அபிஷேக பொருள்கள் வரிசை அழைப்பு நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜருக்கு 108 சங்காபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி, பழங்கள் மற்றும் பால், தயிா், சந்தனம், நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசனமும் அதைத் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன. இரவு திரு ஆபரண அலங்கார காட்சியுடன் கோபுர தரிசனமும், அம்மையப்பன் திருநடன உற்சவமும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

இதுபோல, தருமபுரி நகரில் கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமியை வழிபட்டனா்.

தருமபுரி, நெசவாளா் காலனி மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரா் கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரா் கோயில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரா் கோயில் உள்பட தருமபுரி நகரில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் ஆனித் திருமஞ்சன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.