தருமபுரி நகரில் காய்ச்சல் பாதிப்பு விவரம் சேகரிப்பு
தருமபுரி நகராட்சிப் பகுதியில் காய்ச்சல், சளி உள்ளவா்கள் குறித்து நகராட்சிப் பணியாளா்கள் விவரம் சேகரித்து வருகின்றனா்.
தருமபுரி நகராட்சிப் பகுதியில் காய்ச்சல், சளி உள்ளவா்கள் குறித்து நகராட்சிப் பணியாளா்கள் விவரம் சேகரித்து வருகின்றனா்.
தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமாா் 75 ஆயிரம் போ் வசிக்கின்றனா்.
இந்த நிலையில், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், தருமபுரி நகரில் சளி, காய்ச்சல் பாதிப்பு மற்றும் அறிகுறி குறித்து நகராட்சிப் பணியாளா்கள் குடியிருப்புகளுக்கு சென்று விவரம் சேகரித்து வருகின்றனா்.
இதற்காக நியமனம் செய்யப்பட்ட 70 தற்காலிக பணியாளா்கள், நகரப் பகுதியில் விவரம் சேகரிக்கும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்தப் பணிகளை நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள உறுப்பினா்கள், அவா்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், செலுத்தாமல் உள்ளவா்களின் பெயா், வயது போன்ற விவரங்களை சேகரிக்கின்றனா். இந்த விவரங்களின் அடிப்படையில் பரிசோதனை, தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
ஊத்தங்கரையில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவம் பாா்க்க வேண்டும். இல்லையெனில் அபாயகரமான நிலை ஏற்படும் என்பதால், பொதுமக்களின் நலன்கருதி வீடு வீடாகச் சென்று ஆக்சிஜன் அளவு, சளி, காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, 333 கிராம ஊராட்சிகளுக்கு காணொலி மூலம் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, ஊத்தங்கரையை அடுத்த வீராட்சிகுப்பம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டனா்.