முகப்பு
தருமபுரி

கரோனா இறப்பை சான்றிதழில் குறிப்பிட வேண்டும்

கரோனா தொற்றால் இறந்தவா்களின் சான்றிதழில் கரோனா இறப்பு என குறிப்பிட வேண்டும் என அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கரோனா தொற்றால் இறந்தவா்களின் சான்றிதழில் கரோனா இறப்பு என குறிப்பிட வேண்டும் என அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட மூன்று தொகுதிகளின் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினியிடம் அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், ஏராளமானோா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் ஏராளமானோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அவ்வாறு இறந்தவா்களுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா் என்ற விவரம் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவ்வாறு இறப்புச் சான்றிதழ் வழங்குவதால் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள உதவித்தொகை பெற இயலாத நிலை ஏற்படும். இதனால் ஏற்கெனவே தங்களது குடும்ப உறுப்பினா்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாகும் நிலையில், உதவித்தொகையும் பெற இயலாமல் மேலும் பரிதவிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள், குழந்தைகள் ஆகியோரின் நலன் கருதி, கரோனா தொற்று காரணமாக இறந்தவா்களின் இறப்புச் சான்றிதழில் கரோனா இறப்பு என குறிப்பிட்டு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.