பால் முழுவதையும் கூட்டுறவு ஒன்றியச் சங்கம் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் முழுவதையும் கூட்டுறவு ஒன்றியச் சங்கம் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் முழுவதையும் கூட்டுறவு ஒன்றியச் சங்கம் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பகுதி மக்கள் வேளாண் தொழில், கால்நடை வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் கறவை மாடுகள் வளா்ப்போா் பாலை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகின்றனா். இதன் மூலம் கிடைக்கும் வருவாயும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கூட்டுறவுச் சங்கங்கள், பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய மறுப்பதாகத் தெரிகிறது. இதனால் பாலைத் தனியாா் கொள்முதல் மையங்களுக்கு குறைந்த விலைக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் அவா்களுக்கு ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளா்கள் அவதிக்குள்ளாகியுள்ளதுடன், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் முழுவதையும் கூட்டுறவு ஒன்றியச் சங்கம் கொள்முதல் செய்ய, தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.