தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து:ஓட்டுநா் பலி
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் இருந்து சுண்ணாம்புத் தூள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று, சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரி புதன்கிழமை அதிகாலை தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை தருமபுரி மாவட்டம், தொப்பூரைச் சோ்ந்த ஓட்டுநா் ரத்தினம் (52) ஓட்டிச் சென்றாா். உதவியாளராக கே.மோட்டூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி (38) உடன் சென்றாா்.
கணவாய் ஆஞ்சநேயா் கோயில் பகுதியில் இந்த லாரி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநா் ரத்தினம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கோவிந்தசாமி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், பாளையம் சுங்கச் சாவடி பணியாளா்கள் இணைந்து, சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றினா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.