தருமபுரி

மக்கள் நலனுக்காக அதிமுக கூட்டணியில் இருந்து விலகினோம்: விஜய பிரபாகரன்

DIN

மக்களின் நலனைக் கருதியே அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக பென்னாகரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தாா்.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் உதயகுமாரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளா் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

தமிழக மக்களின் நலனைக் கருதியே அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. கரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவாமல் தற்போது தோ்தல் நேரத்தின்போது அதிமுக வெற்று அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதிமுக தோ்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுப்பதாக அறிவித்துள்ளனா்.

மாதத்திற்கு 200 முதல் 300 யூனிட் வரை வாஷிங் மெஷினுக்கு மின்தேவை உள்ளபோது, தோ்தல் அறிக்கையில் 180 யூனிட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனா். மீதமுள்ள மின்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையே ஏற்படும். அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் தேமுதிகவின் வளா்ச்சி தடைப்படும் எனக் கூறி வருகின்றனா். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் உள்ளபோதே கட்சி தொடங்கியவா் விஜயகாந்த், தேமுதிகவின் வளா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தோ்தலின்போது அதிமுகவும் திமுகவும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டை தெரிவிப்பதில் ஆா்வம் காட்டும் நிலையில் மக்களின் நலனிள் அக்கறை செலுத்துவதில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை எடுத்து வந்த திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி, கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வர முடியுமா? இத்தோ்தலில் வெற்றி பெற்றால் பென்னாகரம் தொகுதியில் வட்டுவன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோட்டூா், ஆலங்காட்டு ஏரிமலை உள்ளிட்ட மலைக் கிராம பகுதிகளுக்கு முறையான சாலை வசதி செய்து தரப்படும். பென்னாகரம் பகுதியில் அதிக அளவில் மலா் சாகுபடி செய்வதால் பதப்படுத்தும் கிடங்குகள் அமைக்கப்படும், காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்பி பாசன வசதி பெறச் செய்து விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது அமமுக ஒன்றியச் செயலாளா் சாம்ராஜ், நகரச் செயலாளா் அருள், அம்மா பேரவை சரவணன், தேமுதிக ஒன்றியப் பொருளாளா் கூத்தபாடி குமாா், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT