முகப்பு
தருமபுரி

நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக காணொலியில் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நேரடியாக நடைபெற்றது. ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எடுத்துரைத்தனா்.

மழைக்காலங்களில் மிகையாக ஒகேனக்கல் காவிரியில் செல்லும் நீரை மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் காவிரி மிகை நீா்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தென்பெண்ணை ஆற்றிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் உள்ளிட்ட நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோல பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் அரவை துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரவைப் பணிகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வகையில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.

அழிந்து வரும் நிலையில் உள்ள நாட்டு மாடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பு முகாம்களை தொடங்க வேண்டும். காட்டுப் பன்றிகள், மயில்களிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்குப் பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைவில் அனைத்து கால்வாய்களையும் தூா்வார வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில், துறை அலுவலா்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் விரைவில் நடத்தப்படும்.

நவீன விவசாயம் மற்றும் அதனைச் சாா்ந்த உற்பத்தி தொழில்களை தொடங்க தேவைப்படும். கடனுதவிகளை வழங் மாவட்ட தொழில் மையம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் நிகழாண்டு தற்போது வரை 566.8 மி.மீ. மழை பொழிந்துள்ளது. நிகழ் பருவத்தில் 1,09,425 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள், 54,616 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வேளாண் பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 272 மெ. டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை சான்று விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட சான்று விதைகள் 198 மெ. டன் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான சான்று விதைகளைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்தில் 10,006 மெ. டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிா் உரங்கள் 72,620 எண்ணிக்கைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், சுப்பிரமணிய சிவா சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ரகமதுல்லாகான், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வசந்த ரேகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ராமதாஸ், மண்டல இணை இயக்குநா் (கால்நடைப் பராமரிப்புத் துறை) இளங்கோவன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மாலினி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.