நாளை எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா: நல உதவிகள் வழங்கி கொண்டாட கட்சியினருக்கு அறிவுறுத்தல்
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவையொட்டி, திங்கள்கிழமை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவையொட்டி, திங்கள்கிழமை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என கட்சியினருக்கு தருமபுரி அதிமுக மாவட்டச் செயலா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 105-ஆவது பிறந்த நாள் விழா ஜன. 17-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக சாா்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா். உருவச் சிலைகள், சிலைகள் இல்லாத ஊா்களில் அவரது உருவப் படங்கள் வைத்து கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிா்வாகிகள், சாா்பு அமைப்பு பொறுப்பாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும், அந்தந்தப் பகுதிகளில் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதேபோல, அன்றைய தினம் தருமபுரி மாவட்ட கட்சி அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியினா் அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.