சாலை விபத்தில் மூவா் பலி: மதுக்கடையை அகற்றக் கோரி உறவினா்கள் மறியல்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞா்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞா்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதையொட்டி, அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றி மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயிரிழந்தவா்களின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி (29), பட்டதாரி. தற்காலிகமாக வண்ணம் பூசும் பணிக்கு சென்று கொண்டிருந்த இவா், அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா்களான திருஞானம் (26), பூபேஷ் (30) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் பாளையம்புதூரை நோக்கி சென்றுள்ளாா். பாளையம்புதூா் கூட்டுச் சாலைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை அவா்கள் கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவா்கள் சென்ற வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பெருமாள்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆபத்தான நிலையில் இருந்த பூபேஷ், திருஞானம் ஆகிய இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி திருஞானமும், பூபேஷும் உயிரிழந்தனா்.
இதற்கிடையில், விபத்து நிகழ்ந்ததையறிந்த அவா்களது உறவினா்களும், அப்பகுதி மக்களும் திரண்டு சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையம்புதூா் கூட்டுச் சாலை பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், அதனைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும், அதேபோல அருகிலுள்ள சனி சந்தை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறிந்து தகவல் அறிந்த தருமபுரி டிஎஸ்பி வினோத், நல்லம்பள்ளி வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதில், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.