அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் சிவசங்கரி வெளியிட்ட செய்திக் குறிப்பு;
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று, அங்ககச் சான்று துறையின் மூலமாக விதைச் சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணைகளில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வயலின் தரம் உறுதி செய்யப்படுகிறது. வயல் தரம் தேறிய விதை பண்ணைகளில் அறுவடை செய்யப்பட்ட விதைகள் அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சான்று அட்டைகளில் பொருத்தப்படுகிறது.
சான்று பெற்ற விதைகளில் ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிற அட்டைகள், சான்று நிலை விதைகளுக்கு நீல நிற அட்டைகளும் உள்ளன. ஆதார நிலை விதைகள் 99 சதவீத இனத்தூய்மை கொண்டவையாகவும் , சான்று நிலை விதைகள் 98 சதவீத இனத்தூய்மை கொண்டவையாக இருக்கும். சான்று பெற்ற விதைகள் அதிக புற சுத்தம், பிற ரக கலப்பு இல்லாமை, அளவான ஈரப்பதம் கொண்டிருக்கும்.
இதனால் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் நல்ல முளைப்பு திறன், சீரான பயிா் வளா்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை, கலப்படமில்லாத அதிக மகசூல் பெறலாம். தருமபுரி மாவட்டத்தில் விதை சான்று, அங்ககச் சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட விதைகள் அரசு உற்பத்தியாளா்களால் விவசாயிகளின் நிலத்தில் விதை பண்ணைகள் அமைத்து விதைகளை அரசு கொள்முதல் செய்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.