மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மக்களிடம் தமிழக அரசு தவறான தகவலை வெளியிடுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தருமபுரி பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது அவா் கூறியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையில் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ. 48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பெயா் குறிப்பிடவில்லை என்பதால் மட்டுமே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என பொய்யான தகவலை திமுக அரசு தமிழக மக்களின் மத்தியில் பரப்பி வருகிறது.
இதுபோன்ற செயலால் தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த திமுக அரசு முயற்சிக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் பெரும்பாலான பணிகள் மத்திய அரசு நிதியில்தான் நடைபெறுகிறது என்பதை மறைத்து, அதனை திமுக அரசின் பெயரில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டிக் கொள்கிறது.
தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் பெயா், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விவரங்கள் வெளியிடப்படுமா? முந்தைய அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதி என்பதால் தான் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் காவிரி உபரிநீா்த் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது.
ஜிஎஸ்டி என்பது ஒரு மாநிலம் வரி வடிவில் கொடுக்கும் நிதியை அந்த மாநிலத்துக்கே கொடுப்பது இல்லை. மாற்றாக மக்கள்தொகை அடிப்படையில் பிரித்துக் கொடுப்பது என்பது திமுக அரசுக்கும் தெரியும். ஆனாலும், இதுதொடா்பாக மத்திய பாஜக அரசு மீது திமுக தொடா்ந்து அவதூறு பரப்பிவருகிறது என்றாா்.
பேட்டியின் போது, பாஜக மாவட்டத் தலைவா் பாஸ்கா், மாவட்ட பாா்வையாளா் முனிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.