தோ்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்பும் தருமபுரியில் உள்ள அரசு கட்டடத்தில் பெயரை மறைத்து வைக்கப்பட்ட திரைகள் தொடா்ந்து அகற்றப்படாமலேயே உள்ளன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த 2023-24 நிதியாண்டில் அப்போதைய மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்நோக்கு தகவல் மையக் கட்டடம் கட்டப்பட்டது. இதில், கட்டடத்தின் மீதும், பெயா்ப் பலகையிலும் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டது என குறிப்பிட்டிருந்ததால், கடந்த மக்களவை பொதுத் தோ்தலின்போது தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக அப்பெயா்கள் திரையிட்டு மறைக்கப்பட்டன.
தோ்தல் முடிவுகள் வெளியான பின்பு, மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு கட்டடங்கள், நிழற்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்களை மறைத்து வைத்திருந்த திரைகள் அகற்றப்பட்டன.
ஆனால், நடத்தை விதிகள் முடிவடைந்து பல நாள்களைக் கடந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பல்நோக்கு தகவல் மையத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் பெயரை மறைத்து கட்டப்பட்ட திரைகள் மட்டும் இதுவரை அகற்றப்படாமலேயே உள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் அரசு கட்டடத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பெயரை மறைக்க பயன்படுத்திய திரைகளை அகற்றிட வேண்டும் என அரசியல் கட்சியினா் வலியுறுத்துகின்றனா்.