தருமபுரி அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானை
தருமபுரி அருகே காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை கிராமப் பகுதிக்குள் சுற்றித் திரிகிறது.
தருமபுரி: தருமபுரி அருகே காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை கிராமப் பகுதிக்குள் சுற்றித் திரிகிறது. இதன் நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம், மாரண்டஅள்ளி காப்புக் காட்டிலிருந்து கடந்த மூன்று நாள்களுக்கு முன் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வெளியேறியது. இந்த யானை தனது வழித்தடத்தை விட்டு விலகி பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் வலம் வந்துக் கொண்டிருந்தது. காரிமங்கலம் அருகே அண்மையில் 22 வயது பெண் ஒருவரை இந்த யானை தாக்கியது. இதில் அப்பெண் பலத்த காயமடைந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், இந்த ஒற்றை ஆண் யானை, சோலைக்கொட்டாய் பகுதி வழியாக திங்கள்கிழமை அதிகாலை தருமபுரி நகரத்தையொட்டியுள்ள ஏ.கொல்லஅள்ளி அருகே ஓடைப் பகுதிக்குள் புகுந்தது. இந்த யானை, தருமபுரி நகருக்குள் அல்லது அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரக் கூடும் என்பதால், வனத்துறையினா் அதன் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அந்த யானையை மீண்டும் காப்புக் காட்டுக்குள் அனுப்பிவைக்கத் தேவையான நடவடிக்கைகளில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலக்கோடு காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஆண் யானை, அதன் வழித்தடத்தை மறந்து, வேறு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இரவு நேரத்தில் அந்த யானை அதிக வேகத்தில் கடந்து செல்வதால், அதனை காட்டுப் பகுதிக்குள் அனுப்பும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது தருமபுரி அருகே ஒரு ஓடைப் பகுதியில் யானை தஞ்சம் அடைந்துள்ளது. யானையை தற்போதுள்ள இடத்திலிருந்து விரட்டும் பணியை மேற்கொண்டால், அந்த யானை அருகில் உள்ள நூலஅள்ளி, ரெட்டியூா் அருகே உள்ள வனத்திற்குள் செல்ல நேரிடும். அவ்வாறு சென்றால், யானை அங்கிருந்து மீண்டும் வெளியேற வாய்ப்புகள் உள்ளன. தற்போதுள்ள பகுதியில் திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதால் அதனை விரட்டாமல் கண்காணித்து வருகிறோம். இருப்பினும் தருமபுரி நகரத்துக்குள் அருகாமையில் யானை சுற்றித் திரிவதால், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஆணை பெறப்பட்டுள்ளது. அதற்கான உகந்த இடத்துக்கு யானையை இடம்பெயரச் செய்யும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம். அவ்வாறு இடம் பெயரும்போது மயக்க ஊசி செலுத்தி, யானையைப் பிடித்து மீண்டும் காப்புக் காட்டில் கொண்டு சென்றுவிடும் பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement