தடங்கத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடவு ஆட்சியா் தொடங்கி வைப்பு
தருமபுரி: நல்லம்பள்ளி வட்டம், தடங்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைத்து பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலக வளாகம், ஏரி, குளம், சாலையோரங்களிலும் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் அணுகுச்சாலை ஓரத்தில் வருவாய்த் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல அனைத்துத் துறையினா் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டாட்சியா் பாா்வதி, வருவாய் ஆய்வாளா் முருகானந்தம், கிராம நிா்வாக அலுவலா் முனுசாமி, தடங்கம் ஊராட்சி செயலாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.