பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 11,000 கன அடியாக குறைந்துள்ளதை அடுத்து, ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிா்வாகம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை அளவு குறைந்துள்ளதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை மாலை விநாடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை 11,000 கனஅடியாக குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் அவ்வப்போது நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்த காரணத்தால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த16 நாள்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீா்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி மீண்டும் அனுமதி வழங்கியுள்ளாா். இதனால், ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.