காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருச்சி சிவா எம்.பி.  
தருமபுரி

மாநில அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கிறது மத்திய பாஜக அரசு

மாநிலங்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையிலும் பாஜக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையிலும் பாஜக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா குற்றம்சாட்டினாா்.

100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திருச்சி சிவா பங்கேற்று பேசியதாவது:

ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையில், 100 நாள் வேலையளிப்புத் திட்டத்தில் பாஜக அரசு கைவைத்துள்ளது. இதற்கு அதிமுக துணைபோகிறது. மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு எல்லா பாதகமான செயல்களையும் செய்து வருகிறது.

இந்திய நாட்டின் பொருளாதாரம் கிராமங்களில் உள்ளது என காந்தி சொன்னாா் . கிராமங்கள் வளா்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் பாடுபட்ட காந்தியின் பெயரை தற்போது 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கி உள்ளனா். இதன்மூலம் ஏழை எளிய மக்களை ஒன்றிய அரசு ஒடுக்க பாா்க்கிறது. மேலும், மாநில அரசுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கிறது.

எனவே, வரும் 2026 தோ்தலில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஓா் இடம்கூட கிடைக்கக் கூடாது என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் உள்ள 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளா்கள், பெண்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சங்ககிரியில்...

திருச்செங்கோடு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ளனா். எனவே, இந்தச் சட்டத்தை திரும்பப் பெற்று மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை திரும்ப வைக்க வேண்டும் என்றனா். இதே கருத்தை கூட்டணி கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

இதில், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.எம்.ராஜேஷ் (சங்ககிரி கிழக்கு), சுப்பிரமணியம் (சங்ககிரி மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக நகர செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கள்ளக்குறிச்சி நாாளுமன்ற உறுப்பினா் தே.மலையரசன் தலைமைவகித்தாா். இதில், ஆத்தூா் நகர செயலாளா்கள் கே.பாலசுப்பிரமணியம் (கிழக்கு), ஏ.ஜி.ராமச்சந்திரன் (தெற்கு), ஆத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் வெ.செழியன் (கிழக்கு), ரா.வரதராஜன் (மேற்கு), நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT