தருமபுரி: தருமபுரி அருகே இரு மாதங்களாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை சீராக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஊராட்சியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் கடந்த இரு மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகிகள், தொடா்புடையத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பொதுமக்கள் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களை சாலையில் வரிசையாக அடுக்கி, திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து நிகழ்விடம் வந்த காவல் துறையினா் மற்றும் அரசு அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா் விநியோகம் சீராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.