தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் சட்டப் பேரவைத் தோ்தலை மையப்படுத்தியே உள்ளன என திரைப்பட நடிகையும், பாஜக கலை கலாசார பிரிவு மாநிலச் செயலருமான கஸ்தூரி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மொரப்பூா் விஸ்வபாரதி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில், பாஜக சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கஸ்தூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் செவிலியா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். அவா்களுக்கு தமிழக அரசு ஓா் உத்தரவு கடிதத்தை கொடுத்தது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தவில்லை. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோவினா் போராட்டம் அறிவித்தனா். உடனடியாக ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை சரிப்படுத்தும் விதமாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
விளைந்த நெல் மணிகள் எல்லாம் வீணாகி வருகின்றன என விவசாயிகள் புலம்பி வருகின்றனா். தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டத்துக்கு முடிவு இல்லை. இந்நிலையில், கல்லூரி மாணவா்கள் 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா்.
கடந்த சில மாதங்களாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும், 2026-இல் நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை மையப்படுத்தியே உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக கூறிவரும் மக்கள் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், தற்போது ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் தொடங்கியுள்ளாா். திமுகமீது அந்த கூட்டணியில் இருப்பவா்களுக்கே நம்பிக்கை இல்லை.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த, அதிமுக, பாஜக கூட்டணியில் இன்னும் சில புதிய கட்சிகள் விரைவில் இணையும். தவெக தலைவா் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் விரைவில் திரைக்கு வரவேண்டும் என ஒரு ரசிகையாக விரும்புகிறேன் என்றாா்.
இந்த விழாவில், பாஜக பட்டியல் அணி மாநிலச் செயலா் கே.கே.சாட்சாதிபதி, மாவட்ட பொதுச் செயலா் பிரவீண், மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.