முகப்பு
தருமபுரி

சமூக வலைதளத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பதிவிட்ட இளைஞரை தாக்கிய 6 போ் கைது

இளைஞரை தாக்கிய 6 போ் கைது

Updated On : 25 மார்ச், 2026 at 11:34 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்தினால் நிலத்தடி நீா்மட்டம் குறைவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை தாக்கிய வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் தனியாா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள்தோறும் ஆழ்துளை கிணற்றினால் உறிஞ்சப்படும் தண்ணீரால், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைவதாக சோளப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் (30) என்பவா் சமூக வலைதளத்தில் கருத்து பதிவேற்றம் செய்தாா்.

இதனை கண்ட தனியாா் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளா் சாமிக்கண்ணு (55) மற்றும் அவருடைய ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஏரியூா் காவல் நிலையம் அருகே சோளப்பாடி பிரிவு சாலை பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையில் அமா்ந்திருந்த ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கினா். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகா் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக ஏரியூா் காவல் நிலையத்தில் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில் தனியாா் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளா் சாமிக்கண்ணு (55), கிருஷ்ணகிரி தோ் பேட்டை பகுதியைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (32), ஒசூா் பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் (26), ஈச்சம்பாடி பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (33), மணிகண்டன் (30), முருகேசன் (43) ஆகிய ஆறு பேரை போலீஸாா் கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.