பென்னாகரம் அருகே யானையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது
பென்னாகரம் அருகே பேவனூர் காப்புக் காடு பகுதியில் ஆண் யானையை சுட்டுக் கொன்றதாக இளைஞரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பென்னாகரம் அருகே பேவனூர் காப்புக் காடு பகுதியில் ஆண் யானையை சுட்டுக் கொன்றதாக இளைஞரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பென்னாகரம் வனச் சரகத்துக்குள்பட்ட பேவனூர் காப்புக் காடு பகுதியில் கடந்த 19-ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத் துறையினர், கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனர். முதலில் தண்ணீர் இன்றி இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனையின் போது அந்த யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் யானையைக் கொன்ற நபரை மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் பென்னாகரம் வன அலுவலர் குணசேகரன் தலைமையில் தனிப் படையினர் தேடி வந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் சின்னப்ப நல்லூர் பகுதியைச் சேர்ந்த மாது மகன் சிவகுமார் (22) என்பவரை வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.