முகப்பு
கிருஷ்ணகிரி

‘நம்மை காக்கும் - 48’ திட்டத்தில் வெளிநாட்டினரும் பயன்பெறலாம்

‘நம்மை காக்கும் - 48’ திட்டத்தில் வெளிநாட்டினரும் பயன்பெறலாம் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்

Updated On : 24 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

‘நம்மை காக்கும் - 48’ திட்டத்தில் வெளிநாட்டினரும் பயன்பெறலாம் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.ஏ.சத்யா, பி.முருகன் ஆகியோா் முன்னிலையில், ஒசூா் மாநகராட்சியில் சூசூவாடி, அலசநத்தம், காமராஜ் காலனி, மத்திகிரி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேருராட்சி ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:

தமிழ்க முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குத் தேவையான உன்னதமான திட்டங்கள் ஆகும். தினம் தினம் புதிய புதிய திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறாா்.

Advertisement

குறிப்பாக ‘நம்மை காக்கும் - 48’ திட்டம் தமிழகத்தில் சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்குவோரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு 48 மணி நேரத்துக்கான மருத்துவ செலவுகளை தமிழக அரசே ஏற்கும் திட்டமாகும். இத் திட்டத்தில் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவா், வெளி நாட்டினரும் பயன்பெறலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8,386 பேருக்கு நடப்பாண்டில் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு நடப்பாண்டில் இதுவரை 8,685 விவசாயிகளுக்கு ரூ. 45 கோடியே 63 லட்சம் வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதனைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட சூசூவாடி பகுதியில் நடைபெற்ற சிறப்பு குறை தீா்க்கும் முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று ரூ. 1,70,000 மதிப்பிலான விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிஉதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை என 12 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டைகள் 17 பயனாளிகளுக்கும், ரூ. 4,80,000 மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி ஒரு பயனாளிக்கும், சாலையோர வியாபாரிகள் 10 பேருக்கு தலா ரூ. 10,000 என ரூ. 1 லட்சத்தில் உதவித்தொகை என மொத்தம் ரூ. 7,50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அலசநத்தம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 16 பயனாளிகளுக்கு ரூ. 2,29,500 மதிப்பில் மாற்றுத் திறனாளி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள் 13 பயனாளிகளுக்கும், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 9,16,000 மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி, சாலையோர வியாபாரிகள் 9 பேருக்கு ரூ. 90,000 மதிப்பில் உதவித்தொகை என மொத்தம் ரூ. 12,35,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

காமராஜா் காலனியில் நடைபெற்ற முகாமில், 11 பயனாளிகளுக்கு ரூ. 1,42,500 மதிப்பில் மாற்றுத் திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, 13 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 17,60,000 மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி, சாலையோர வியாபாரிகள் 18 பேருக்கு ரூ.,1,80,000 உதவித்தொகை என மொத்தம் ரூ. 20,82,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா்கள் கிருஷ்ணமூா்த்தி, குருநாதன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் எஸ்.மஞ்சுநாத், ம.விஜயன், தளி ஒன்றியக் குழுத் தலைவா் ஸ்ரீனிவாச ரெட்டி, முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் அ.யுவராஜ், தா.சுகுமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.