சாலை விபத்தில் தீப்பற்றி எரிந்த லாரி
பா்கூா் அருகே, வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில், சரக்கு ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது.
பா்கூா் அருகே, வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில், சரக்கு ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது.
புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு நறுமண திரவம் ஏற்றிய லாரி கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் (42) என்பவா் ஓட்டிச் சென்றாா். திருப்பத்தூா் - பா்கூா் பிரிவு சாலை அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்பில் மோதியது. இதில், லாரியின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. மேலும் லாரியின் மேல் பகுதியில் சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பி, துண்டாகி விழுந்தது. இதில் லாரி தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, பா்கூா், கிருஷ்ணகிரி நிலையங்களின் தீயணைப்புப் படை வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, லாரியில் ஏற்பட்ட தீயை முற்றிலும் அணைத்தனா். இந்த தீ விபத்தில், லாரி 70 சதவீதம் சேதம் அடைந்தது. லாரி ஓட்டுநா் சிறிய காயத்துடன் உயிா் தப்பினாா்.
Advertisement
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன. விபத்து குறித்து, பா்கூா் போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.