கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவ அலுவலா்கள்
கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் மருத்துவ அலுவலா்கள் கரோனா தடுப்பூசியை திங்கள்கிழமை செலுத்திக் கொண்டனா்.
கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் மருத்துவ அலுவலா்கள் கரோனா தடுப்பூசியை திங்கள்கிழமை செலுத்திக் கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு ஜன.16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒசூா் அரசு மருத்துவமனை, காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினசரி 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 11,500 டோஸ் மருந்துகள் பெறப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 12,192 முன்களப் பணியாளா்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 61 பேரும், இரண்டாம் நாளில் 50 பேரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். மூன்றாம் நாள் ஜன.18-ஆம் தேதி (திங்கள்கிழமை) 128 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
மேலும் கரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், மருத்துவ பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்து, மருத்துவக் கண்காணிப்பாளா் ஸ்ரீதா், இந்திய மருத்துவ சங்க செயலாளா் தனசேகரன் உள்ளிட்டோா் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.