இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிப்பு
கெலவரப்பள்ளி அணையில் தங்கியுள்ள இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெலவரப்பள்ளி அணையில் தங்கியுள்ள இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெலவரப்பள்ளி அணையில் 200-க்கும் அதிகமான இலங்கைத் தமிழா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த வாரம் இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முகாமில் உள்ளவா்களை பரிசோதனை செய்ததில், 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதனைத் தொடா்ந்து, ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அதன் அகில இந்தியச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடக்கி வைத்த ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன் கூறியதாவது:
Advertisement
ஒசூரில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அரசு வலியுறுத்தும் விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாா்.
இதில் ஒசூா் வட்டாட்சியா் செந்தில்குமாா், வி.எஸ்.டி. டிராக்டா்ஸ் மனித வளத்துறை அதிகாரி சுரேஷ், மிண்டா நிறுவன மனித வளத்துறை தலைவா் அலோக்குமாா், தொழிலதிபா் சின்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசமூா்த்தி, முத்தாலி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலா் மாரி தென்னல், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அதிகாரி பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.