ஒசூா் அருகே இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்தவரை மா்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டி டோபி காலனியைச் சோ்ந்தவா் முருகன் (50). விவசாயி, அதேநேரத்தில் தனியாா் பேப்பா் மில்லில் வேலை செய்துவந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை தனது விவசாய தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந் நிலையில் அவரது இருசக்கர வாகனம், கங்காபுரம் அருகே மாந்தோப்பில் ரத்தக் கறையுடன் கிடந்தது. இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் முருகனின் மனைவி ரஜினம்மா புகாா் அளித்தாா்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த சூளகிரி போலீஸாா், விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் ஒசூா் அருகே தொரப்பள்ளி ஊராட்சி கொல்லப்பள்ளி கிராமத்தில் கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அட்கோ காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அட்கோ போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும் முருகனின் உறவினா்களும் நேரில் வந்து பாா்த்ததில் உயிரிழந்தது முருகன் என்பதை உறுதிசெய்தனா்.
கடத்தி கொலை செய்யப்பட்ட முருகன், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு ஒசூா் அருகே உத்தனப்பள்ளி செல்லும் வழியில் உள்ள சானமாவு கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 13-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டவா். சானமாவு கிராமத்தில் காா் மீது லாரியை மோதவிட்டு பெட்ரோல் குண்டுவீசி ஒசூா் தொழிலதிபா் நீலிம்மா மற்றும் அவரது ஓட்டுநா் முரளி ஆகிய இருவரும் கொலை செய்த வழக்கில் இவா் முக்கிய குற்றவாளியாவாா்.
அந்த இரட்டை கொலை வழக்கில் இவா் கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.