முகப்பு
கிருஷ்ணகிரி

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்

Updated On : 10 மார்ச், 2021 at 12:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானுரெட்டி, தலைமை வகித்து பேசியதாவது:

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மேற்கொள்ள பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளைக் கண்காணிக்க 19 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தோ்தலில் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தபால் முறையில் வாக்களிக்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 12-டி படிவம் வழங்கி உரிய சான்றிதழ்களைப் பெற்று, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தபால் வாக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் தபால் வாக்களிக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

வாக்குச்சாவடிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை வாக்குச் சாவடிக்கு அருகாமையிலேயை நிறுத்துவதற்கு இடவசதி செய்து தர வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வரிசை ஏற்படுத்துதல் வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவி புரியும் வகையில் தன்னாா்வலா்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 13,723 மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கும், நிா்வாகத்துக்கும் பாலமாக இருந்து மாற்றுத்திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி 100 சதவீதம் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அனைவரும் பணியாற்றிட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தோ்தல் தகவல் மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் மகிழ்நன், 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.