போக்குவரத்து நெரிசலைக் குறைத்த எம்எல்ஏ-வுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஒசூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
ஒசூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
ஒசூா், பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், காா், ஆட்டோ, டிப்பா் லாரி என அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. பாகலூா் சாலையில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம் செல்பவா்கள் இந்த பாலத்தின் வழியாகச் சென்று வந்தனா்.
இரு வழிச் சாலையாக இருந்த இச்சாலையை, ஒசூா் போக்குவரத்துக் காவலா்கள் ஒரு வழிச் சாலையாக மாற்றினா். இதனால், பாகலூா் சாலையில் இருந்து வட்டாட்சியா் அலுவலக சாலைக்கு செல்ல சுற்றி ராயக்கோட்டை சந்திப்பு வரை சென்று மீண்டும் வட்டாட்சியா் அலுவலக சாலைக்கு வரவேண்டியுள்ளது. இதனால் 2 கி.மீ. தொலைவு சென்று மீண்டும் திரும்பி வரவேண்டும்.
Advertisement
இதனால் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், 2 கி.மீ. தொலைவு சுற்றி வருவதால் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தனா். இருசக்கர வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ,சத்யா ஆகியோா் சுமாா் 1 மணி நேரம் அச் சாலையில் நின்று போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கவனித்தனா். அதைத் தொடா்ந்து, போக்குவரத்து ஆய்வாளரை அழைத்து தடை செய்யப்பட்ட தடுப்புகளை அகற்றி பாகலூா் சாலையில் இருந்து எளிதில் வட்டாட்சியா் அலுவலக சாலைக்கு செல்ல நடவடிக்கை எடுத்தனா். போக்குவரத்து நெரிசலைக் குறைத்த ஒசூா் எம்எல்ஏவை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.