கால்நடைகளுடன் குட்டை நீரை அருந்தும் மலைவாழ் மக்கள்
கால்நடைகளுடன் கலங்கிய குட்டை நீரை அருந்தும் நிலையிலிருந்து தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கால்நடைகளுடன் கலங்கிய குட்டை நீரை அருந்தும் நிலையிலிருந்து தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.பி.முனுசாமி எம்எல்ஏவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனா்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தன் தொகுதிக்குள்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சியில் உள்ள மலைக்கிராமங்களான ஏக்கல்நத்தம், ஏக்கல்நத்தம் காலனி, கொள்ளூா், சிக்கசக்னாவூா், பெரியசக்னாவூா், நல்லகொண்டனபள்ளி, தாசினாபூா், மகாராஜகடை உள்ளிட்ட 11 கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து, மக்களின் குறைகளை வியாழக்கிழமை கேட்டறிந்தாா். அப்போது, ஏக்கல்நத்தம், ஏக்கல்நத்தம் காலனி பகுதி மக்கள் எம்எல்ஏ கே.பி.முனுசாமியிடம் கூறியதாவது:
இப்பகுதியில் 200 வீடுகளில் ஆயிரம் போ் வசித்து வருகிறோம். இங்கு பட்டா நிலங்களுக்கு மத்தியில் உள்ள சமவெளிப் பகுதியில் விவசாயம் செய்து வந்த பகுதிகளை வனத் துறையினா் பறித்துவிட்டனா். இதனால் 40 குடும்பங்கள் பிழைப்பைத் தேடி ஆந்திர, கா்நாடக மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனா். மேலும், இப்பகுதியில் குடிநீா் வசதி செய்து தராததால், 2 கி.மீ. தொலைவு நடந்து சென்று கால்நடைகள் அருந்தும் குட்டையில் தேங்கியுள்ள கலங்கிய நீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். எனவே, தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
அதைத் தொடா்ந்து, குட்டை அமைந்துள்ள இடத்துக்குச் சென்ற எம்எல்ஏ, அங்கு தேங்கி இருந்த நீரை அருந்தினாா். மேலும், அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து பாதுகாப்பான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏக்கல்நத்தம் காலனியில் சிதிலமடைந்த குடியிருப்புகள் சரிசெய்யப்படும், ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்துக்குச் செல்லும் சாலைகளில் தரைப்பாலத்தில் தண்ணீா் தேங்கியுள்ளதால் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டவும், வனத் துறையினா், அதிகாரிகளுடன் கலந்து பேசி தொடா்ந்து இப்பகுதிகளில் விவசாயம் செய்ய ஆவன செய்வதாகவும் உறுதியளித்தாா்.
அப்போது, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் கன்னியப்பன், கட்டடத் தொழிலாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் ஆஜி, ஏக்கல்நத்தம் கிராம முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.