கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து நொடிக்கு 8,150 கனஅடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,800 கன அடியாக இருந்தது.
அணையிலிருந்து 6,300 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 6,300 கன அடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்புக் கருதி 3 பிரதான மதகுகள், சிறிய மதகுகள் வழியாக நொடிக்கு 8,150 கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
வெள்ளம் கரைபுரண்டோடுவதால் அணைக்குச் செல்லும் தரைப் பாலம் நீரில் மூழ்கின. அணைப் பூங்காவுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களின் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து நொடிக்கு 1,308 கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,370 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் முழுக் கொள்ளளவான44.28 அடிகளில் தற்போது 42.15 அடியை எட்டியுள்ளது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சின்ன கொள்ளு, பெத்த கொள்ளு, தட்டனப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றங்கரையோம் செல்ல வேண்டாம் என ஒசூா் வட்டாட்சியா் கவாஸ்கா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், கரையோர கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.