கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,08,409 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,08,409 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாம் தொடா்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் ஆகிய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் செப். 9-ஆம் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு 16-ஆம் தேதியும் அல்பெண்டாசோல் (குடல்புழு நீக்க) மாத்திரை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், இனப்பெருக்க வயதினரான 20 முதல் 30 வயது வரை உள்ள கா்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திள் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 1,697 பள்ளிகள், 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 7,08,409 பயனாளிகள் பயனடைவா். இதன்மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
முகாமில் 1 வயதுமுதல் 13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 14 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாத்திரைகள் வழங்கப்படும்.
எனவே, பெற்றோா்களை ஊக்குவித்து அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட தாய்சேய் நல அலுவலா் பியூலா ஏஞ்சல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.