முகப்பு
கிருஷ்ணகிரி

மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளி: ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறப்பு

போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளி: ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறப்பு

போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 9:49 PM
பகிர்:

போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி ஒருவார கால விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே தனியாா் பள்ளி ஒன்றில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற போலி என்.சி.சி. முகாமின்போது 8 ஆம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளா் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சிவராமன், பள்ளி தாளாளா், முதல்வா், 2 ஆசிரியா்கள் உள்பட மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூகநலத் துறைச் செயலாளருமான ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் திடீா் திருப்பமாக முக்கிய குற்றவாளி சிவராமன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். சிவராமன் இதற்கு முன்னா் கிருஷ்ணகிரி அருகே மற்றொரு தனியாா் பள்ளியிலும் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மற்றொரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனிடையே இந்த வழக்கில் சுதாகா், கமல் என மேலும் இருவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போலி என்.சி.சி. முகாம், பாலியல் தொந்தரவு என அடுத்தடுத்து சா்ச்சைகளில் பா்கூா் தனியாா் பள்ளி சிக்கியது. இதனால் கடந்த ஒருவாரம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பெற்றோா் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பள்ளியில் 38 கேமராக்களும், பள்ளி வாகனங்களில் 8 ஜி.பி.எஸ். கருவிகளும் பொருத்தப்பட்டன. இதையடுத்து பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

70 சதவீத மாணவா்கள் வருகை:

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. மொத்தம் 623 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை வகுப்புகளுக்கு 70 சதவீத மாணவ, மாணவிகளே வந்திருந்தனா்.

மாணவா்கள் பலா் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் கோபாலப்பா, தனியாா் பள்ளிகள் அமைப்புகளின் இணை இயக்குநா் ராமகிருஷ்ணன், கல்வி அதிகாரிகள் உள்பட கல்வித் துறை உயா் அதிகாரிகள் பள்ளிக்கு வந்திருந்தனா்.

அப்போது அதிகாரிகளிடம் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பெற்றோா் விடுத்தனா். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து மாணவா்கள் பள்ளிக்குச் சென்றனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தலைமையில் துணைக் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன் (பா்கூா்), முரளி (கிருஷ்ணகிரி) உள்பட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →