டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு
டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது.
மாநிலங்களவையில் கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்காத திமுக, தற்போது டங்ஸ்டன் சுரங்க ஏலத்தைத் தடுப்பது போன்று நாடகமாடுகிறது என்று அதிமுக மாநிலங்களை எம்.பி. மு.தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளாா்.
அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:
டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான நான் தவறிழைத்து விட்டதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். முதல்வா் மு.க.ஸ்டாலின் தன் மீதான பழியை மறைக்கவே அவரும், அவரது அமைச்சா்களும் அதிமுக மீது பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புகின்றனா்.
Advertisement
நாட்டின் இயற்கை வளங்கள் தவறானவா்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதா 28.7.2023 இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, 2.8.2023 தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
அப்போது இந்த மசோதா மாநிலங்களின் உரிமையைப் பறிக்க கூடாது என்று நான் எதிா்ப்பு தெரிவித்தேன். எனக்கு பதில் அளித்த மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி என் பெயரைக் குறிப்பிட்டு பேசுகையில், ‘இந்தச் சட்டத்தில் மாநிலங்களின் குழு தரும் ஒப்பதலின்படியே கனிம வளங்கள் ஏலம் விடப்படும். மாநில அரசு கனிம வளங்களை தாங்களே வெட்டி எடுத்தால் அதற்கான முழு செலவையும் மத்திய அரசு வழங்கும். தனியாருக்கு வழங்க முடிவெடுத்தால் அதை மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசே ஏலம்விடும். கனிம வள ஏலத்தில் தங்களுக்கு வேண்டியவா்களுக்கு ரகசியமாக ஒதுக்கீடு செய்வதைத் தடுப்பது இதன் நோக்கம்’ என்று அமைச்சா் தெரிவித்தாா். இது அவைக் குறிப்பில் தெளிவாக உள்ளது. சட்டத் திருத்தமும் அதைத்தான் கூறுகிறது.
அப்போது இந்த விவகாரம் எழுகையில், தமிழகத்தில் இருந்து அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினரான நானும், ஜி.கே.வாசன் எம்.பி.யும் மட்டுமே குரல் கொடுத்தோம். திமுக உறுப்பினா்கள் ஒருவா் கூட இந்தக் கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் எதிா்த்துப் பேசவில்லை. மாநிலங்களவையில் 2.8.2023 அன்று நடைபெற்ற கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதா நடவடிக்கையில் திமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை என்று அவை குறிப்புத் தெளிவாக உள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு திமுக அரசு எழுத்து பூா்வமாக ஒப்புதல் தெரிவித்த பின்னரே மத்திய அரசு அதற்கு ஏலம் அறிவித்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒப்புதல் அளித்த பிறகே டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு இருமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதல்முறை சரியான ஏலத்தொகை கிடைக்காத காரணத்தால் இரண்டாவது முறை ஏலம் அறிவிக்கப்பட்டது.
தற்போது மக்கள் இதை எதிா்த்து போராட்டம் நடத்துவதால் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல திமுக அரசு தடுமாறுகிறது. மக்களின் கோபத்தைத் திசை திருப்பவே சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தீா்மானம் கொண்டு வந்தாா்.
2 ஜி ஸ்பெக்’ஈரம் ஊழலைப்போல, ஏலத்தைப் புறக்கணித்து விட்டு தாங்களே டங்ஸ்டன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று எதிா்பாா்த்த திமுக தற்போது மாட்டிக் கொண்டது.
மக்களவையில் கடந்த 2.8.2023 அன்று கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது நாடகமாடுவது தமிழக மக்களிடம் எடுபடாது என அதில் தெரிவித்துள்ளாா்.