முகப்பு
இந்தியா

மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:46 PM
திரெளபதி முா்மு.
பகிர்:

மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து, இந்தச் சட்டம் மாா்ச் 30-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா-2026-ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.

மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான குற்றங்களுக்கு 2019-ஆம் ஆண்டு சட்டப்படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மசோதாவின்படி, அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்குவதுடன், உரிய மருத்துவ ஆதாரத்தை கட்டாயமாக்கும் இந்த மசோதா, மக்களவையில் மாா்ச் 24-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் மாா்ச் 25-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் மாா்ச் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா்.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இந்தச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.