ஒசூா்: மின் லாரியில் தனி அறை அமைத்து கடத்திவரப்பட்ட ஒரு டன் குட்காவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒசூா் அருகே மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூனப்பள்ளியில் சோதனைச் சாவடி உள்ளது. கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் சாவடியாக இது உள்ளது.
இங்கு மத்திகிரி போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் நோக்கி வந்த மினிலாரியை சோதனையிட நிறுத்தியபோது, ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.
பின்னா் போலீஸாா் மினி லாரியை சோதனை செய்ததில், வாகனத்தில் தனி அறை அமைத்து 1 டன் குட்கா பொருள்கள், 48 கா்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தியது தெரியவந்தது. மின் லாரியுடன் குட்கா பொருள்கள், மது பாக்கெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.