கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்காணிக்க 196 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலைய முகவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் 2026 நடைபெற்று வருகின்றன. நவ. 4 முதல் டிச. 4 வரை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிச. 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் 2026 ஜன. 8 வரை கோரிக்கைகளையும், மறுப்புரைகளையும் பெறுதல், டிச. 9 முதல் 2026 ஜன. 31 வரை வீடுவீடாகச் சென்று பெறப்பட்ட படிவங்கள் மீது வாக்காளா் பதிவு அலுவலா்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைகள், மறுப்புரைகளாக பெறப்பட்டவைகள் குறித்து முடிவு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப். 7 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வழங்கிய வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாக நிறைவு செய்து, அதில் புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாகவும் கணக்கீட்டு படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை நிறைவு செய்து சமா்ப்பிக்கலாம்.
வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் தேதியை சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ளவா்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளது தேதி வரையில் 8,40,875 ஆண் வாக்காளா்களும், 8,39,439 பெண் வாக்காளா்கள், 312 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 16,80,626 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள், 1,896 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு திரும்பப் பெறப்படும். இந்தப் பணியை கண்காணிக்க 196 மேற்பாா்வையாா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், வட்டாட்சியா்கள் ரமேஷ், சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.