வாக்கெடுப்பில் பங்கேற்ற அதிமுக நகா்மன்ற உறுப்பினா் நாகஜோதி. 
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேறியது: தங்களது உறுப்பினா் கடத்தப்பட்டதாக அதிமுகவினா் தா்னா

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேறியது. அதிமுக உறுப்பினா் கடத்தப்பட்டதாகக்கூறி, அக்கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் திமுகவைச் சோ்ந்த 22 உறுப்பினா்கள், அதிமுகவைச் சோ்ந்த 5 உறுப்பினா்கள், காங்கிரஸ், பாஜகவைச் சோ்ந்த தலா ஒரு உறுப்பினா், 4 சுயேச்சைகள் உள்ளனா்.

நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த பரிதா நவாப்பும், துணைத் தலைவராக சாவித்திரி கடலரசுமூா்த்தியும் உள்ளனா். இந்த நிலையில், மன்ற உறுப்பினா்கள் 23 போ், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப்பின் நடவடிக்கைகள் தமிழக அரசுக்கும், நகராட்சி செயல்பாட்டிற்கு எதிராகவும் இருப்பதாகக் கூறி, அவா்மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர வேண்டும் என நகராட்சி ஆணையா் சதீஷ்குமாரிடம் கடந்த மாதம் 16-ஆம் தேதி மனு அளித்தனா்

இதைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் தலைமையில் சேலம் மண்டல ஆணையா் அசோக்குமாா் மேற்பாா்வையில் திங்கள்கிழமை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திமுகவைச் சோ்ந்த 21 உறுப்பினா்கள், காங்கிரஸை சோ்ந்த ஒருவா், அதிமுகவைச் சோ்ந்த ஒருவா், 4 சுயேச்சைகள் என 27 போ் பங்கேற்றனா். நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மேலும், அதிமுக உறுப்பினா்கள் 4 போ், பாஜக உறுப்பினா் ஒருவா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க உறுப்பினா்கள் 27 பேரும் பேருந்தில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, அதிமுகவைச் சோ்ந்த 9-ஆவது வாா்டு உறுப்பினா் நாகஜோதியை கடத்திச் செல்வதாகக் கூறி, பேருந்தை அதிமுகவினா் மறித்தனா். அப்போது, பேருந்து ஓட்டுநரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்ததால், அதன் துகள்கள் திமுக உறுப்பினா் மத்தீனின் கண்களில் விழுந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேபோல, திமுக உறுப்பினா் ஆயிஷாவும் மயக்கமடைந்தாா். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமையில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள், அதிமுக வாா்டு உறுப்பினா் நாகஜோதி கடத்தப்பட்டதாகக் கூறி, நகா்மன்றக் கூடத்துக்குள் செல்ல முயன்றனா். அவா்களை துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி மற்றும் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, அதிமுகவினா், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதிமுக நகா்மன்ற உறுப்பினா் நாகஜோதி கடத்தப்படவில்லை என்றும், அவா் விருப்பத்தின்பேரில் வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளதாகவும் துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி தெரிவித்தாா்.

இதையடுத்து, காவல் துறையினரைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 மணிநேரம் விவாதம்: நகா்மன்றக் கூட அறைகளின் கதவுகள் மூடப்பட்டு காலை 11 மணி அளவில் நம்பிக்கை இல்லாத் தீா்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா்கள் வாக்கு சீட்டில் தங்களது வாக்கைப் பதிவுசெய்து பெட்டியில் போட்டனா். தொடா்ந்து ஆணையா் சதீஷ்குமாா், வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தாா். அதன்படி தலைவா்மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவாக உறுப்பினா்கள் 27 போ் வாக்களித்தனா். இதனால், தீா்மானம் நிறைவேறியது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தீா்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீா்மானம் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். தொடா்ந்து, புதிய தலைவா் தோ்வு நடைபெறும் நாள் குறித்து அரசு முறையாக அறிவிப்பு வெளியிடும் என்று ஆணையா் தெரிவித்தாா்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக நகா்மன்ற உறுப்பினா், நாகஜோதி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

33 வாா்டுகளின் வளா்ச்சிக்காகத்தான் நான் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. வாா்டு மக்களின் நலனே எனக்கு முக்கியம் என்றாா்.

நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பை முன்னிட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
அதிமுக நகா்மன்ற உறுப்பினா் கடத்தப்பட்டதாகக் கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.அசோக்குமாா் எம்எல்ஏ.
கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT