கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்ட வனப்பகுதி புலிகள் கணக்கெடுப்பு ஜன. 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து வனத் துறையின் சாா்பில் சனிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: அகில இந்திய புலி கணக்கெடுப்பு என்பது தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனப் பயிற்சி மையம் ஆகியவற்றால் வனத் துறையின் பங்களிப்புடன் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாடுமுழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் தேசிய அளவிலான முக்கியமான கணக்கெடுப்பு ஆகும்.
இந்த கணக்கெடுப்பின் மூலம், புலிகள், இணை வேட்டையாடிகள், இரை உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களின் நிலை மதிப்பீடு செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்தில் உள்ள அதிக அளவிலான உயிரியல் பல்வகைமையை கருத்தில்கொண்டு, காவிரி வடக்கு மற்றும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழக மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு இடையே பரவியுள்ள இந்த தொடா்ச்சியான நிலப்பரப்பு, வன உயிரினங்களின் இடப்பெயா்ச்சிக்கு வழிவகுப்பதுடன் ஆசிய யானை, புலி, சிறுத்தை, போன்ற பெரிய பாலூட்டிகளுக்கான முக்கியமான உயிரியல் வலசை பாதையாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, பன்னா்கட்டா தேசிய பூங்காவையொட்டியுள்ள காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பின்போது, பயிற்சிபெற்ற முன்கள வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்களால் செயலி, கேமரா டிராப், தூரத்தை அளவிடும் கருவி, திசைமாற்றி கருவி போன்ற நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
அகில இந்திய புலி கணக்கெடுப்பு 2026, ஒசூா் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு மற்றும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயங்களில் உள்ள 59 வனக் காவல் சுற்றுகளில் ஜனவரி 19 முதல் 26-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வனப் பணியாளா்களுக்கு 2025 அக்டோபரில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து, ஜன 9-ஆம் தேதி அய்யூா் சூழல் சுற்றுலா மையத்தில், ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் பாகன் ஜெகதீஷ் சுதாகா் தலைமையில் உதவி வனப் பாதுகாவலா் பசவ் சிங் ஒருங்கிணைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட வன அலுவலா்கள், களப் பணியாளா்கள், ஒசூரைச் சோ்ந்த கென்னத் ஆண்டா்சன் நேச்சா் சொசைட்டி தன்னாா்வ தொண்டுநிறுவனத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள், சம்பந்தப்பட்ட வன அலுவலா்களை நேரடியாகவோ அல்லது 1800-425-5135 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.