ஒசூா் பகுதியில் அறிவுசாா் வழித்தட திட்டம் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி முதல் எலுவப்பள்ளி வரையில் 3,700 ஏக்கா் விளைநிலத்தில் அறிவுசாா் வழித்தடம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, மோரணப்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கதிரேப்பள்ளி கிராம பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ் கலந்துகொண்டு பேசியதாவது:
விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளாது. முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வந்தபோது அறிவுசாா் வழித்தடம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா். ஆனால் விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தாது. இது தொடா்பாக வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றாா்.