முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அருகே சூறாவளிக் காற்றுடன் மழை

நாமக்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழைக்கு சுமார் 30 வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. மக்கள்  இரவில் தூங்க முடியாமல்  மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். தவிர, சேந்தமங்கலம் பகுதியில் 50 ஆண்டு கால புளியமரம் ஒன்றும் வேறோடு சாய்ந்தது. 

Updated On : 12 மே 2013, 5:33 am IST
பகிர்:

நாமக்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழைக்கு சுமார் 30 வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. மக்கள்  இரவில் தூங்க முடியாமல்  மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். தவிர, சேந்தமங்கலம் பகுதியில் 50 ஆண்டு கால புளியமரம் ஒன்றும் வேறோடு சாய்ந்தது. 

 நாமக்கல் அருகேயுள்ள சிவியாம்பாளையம் அருந்ததியர் காலனியில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது, வீசிய சூறாவளிக் காற்றில் சுமார் 30 வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

சில வீடுகளின் கூரைகள் விழும் நிலையில் உள்ளதால் அந்த வீடுகளில் தங்குவதற்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

 இதுகுறித்து, அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் பாதிப்புகளை கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார்.

ஆனால், இரவில் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, வட்டாட்சியர் ராமசாமி இரவு 10 மணிக்கு அங்கு சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பிறகு, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சேதத்தை கணக்கிட்டு நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

பாதிப்பு குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது:

சிவியாம்பாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள பெரும்பாலான வீடுகள் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதற்குப் பிறகு, பழுதடைந்த வீடுகளை சீரமைத்துத் தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கன மழைக்கு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

50 ஆண்டு கால புளியமரம் சாய்ந்தது

வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த  மழைக்கு, சேந்தமங்கலம், வடுகப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டு கால புளியமரம் ஒன்று வேறோடு சாய்ந்தது.

இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த சேந்தமங்கலம் போலீஸார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். பிறகு, பொக்லைன் இயந்திரம் கொண்டு புளிய மரம் அகற்றப்பட்டது.  சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு, போக்குவரத்து சீரடைந்தது.

இதேபோல, கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி பகுதியில் சூறாவளிக் காற்றுக்கு தென்னை மரம் முறிந்து விவசாயி வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டில் இருந்தவர்கள் அந்த நேரத்தில் வெளியே வந்திருந்ததால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.