வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் கடனுதவியை அரசு வழங்குகிறது. அதில் ரூ.8 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற வேளாண் குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: மானாவாரி சாகுபடியினை மேம்படுத்துவதற்கு, தமிழக அரசு நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கம் என்ற திட்டத்தை 2016-17 முதல் 2019-20 வரை 4 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தலா 1,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட 50 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, முதல்கட்டமாக நிகழாண்டில் 10 தொகுப்புகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நுழைவுக் கட்டப் பணிகள், கோடை உழவு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மானாவாரி நிலங்களில் நுழைவுக் கட்ட செயல்பாடுகளாக தேர்வு செய்யப்பட்ட மானாவாரி நிலத்தொகுப்பில், அதற்கான மேம்பாட்டுக் குழு மற்றும் விவசாயிகளின் ஆலோசனைகளின்படி தடுப்பணைகள், கிராம குளங்கள் போன்ற மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அமைக்கப்படும்.
கோடை உழவு மானியம்: வறட்சி காரணமாக மேல் மண் இறுகியிருக்கும் நிலையில், ஐந்து கொத்து கொழுக்கலப்பை மூலம் முகடும் வாய்க்காலுமான முறையில் உழவு செய்யப்பட்டு, கோடை மழையை அதிகளவில் வயல்களில் தேக்கி மண்ணின் ஈரப்பதத்தை அதிகரித்து நிலத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும்.
மேலும், கோடை உழவின் மூலம் களைகளும், மண்ணில் உள்ள தீமை செய்யும் புழுக்களும், புழுக்களின் முட்டைகளும் பெருமளவில் அழிக்கப்படும். மானாவாரி தொகுப்பு நிலங்களில் உழவுப் பணி மேற்கொள்ள ஹெக்டேருக்கு மானியமாக ரூ.1,250 வழங்கப்பட உள்ளது.
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு: மானாவரி நிலத்தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள் மூலம் விவசாயிகளை கலந்தாலோசித்து ஏதுவான இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட தொகுப்புகளில் உள்ள மானாவாரி நிலங்களில் தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் மற்றும் கிராம குளங்கள் போன்ற மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும் ரூ.7.50 லட்சம் மதிப்பில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளன.
வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள்: பண்ணை இயந்திரங்களின் உபயோகத்தை அதிகப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு தொகுப்புக்கும் தலா ஒரு வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க அனுமதிக்கப்படும். இதில் ரூ.8 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும்.
இந்த வாடகை மையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் குறைந்தது 8 விவசாயிகள் அடங்கிய விவசாயக் குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் ஏற்படுத்தப்படும்.
இந்த குழுக்கள் அல்லது அமைப்புகள் சொந்த தேவைக்கு மட்டும் வேளாண் இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தாமல், தேவைப்படும் மற்ற விவசாயிகளுக்கும் வாடகைக்கு வழங்க வேண்டும்.
எனவே, நீடித்த மானாவாரி சாகுபடிக்கான திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த பணிகளை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.